இவ்வளவு பெரிய வெற்றி பெற்றும் கவலையில் ஸ்டாலின்... தொண்டர்கள் மத்தியில் உருக்கம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும், ஒரே ஒரு கவலை எனக்கு இருக்கிறது என்று ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் உருக்கமாக பேசியுள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டமாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை பிடிக்கவுள்ளது.

இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதே சமயம் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக கூட்டணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிக இடங்களிலும், இடைத்தேர்தலில் 13 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை வகித்து வருகிறது.

முன்னிலை நிலவரங்களுக்கு மத்தியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, `மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்த தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி. இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

இதற்காக உழைத்த தொண்டர்கள், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இந்த வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், களத்தில் இறங்கும் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.

அதன்படி இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். இப்போது ஒரே ஒரு கவலைதான். அது, கலைஞர் இந்த வெற்றியைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இன்னும் சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருக்கிறது.

இதனால் எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என சதி வேலை செய்வார்கள். அதை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்