இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர்.. சர்வதேச தீவிரவாதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் திகதி துணை இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்ன் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ஆம் திகதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் திகதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், சீனா தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை முன்வைத்து தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை ஆய்வு செய்ய இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது. இதனால் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க 4-வதுமுறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், 1267 பாதுகாப்புக் குழு இன்று ஐ.நாவில் கூடியது. அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினரான சீனா, கடந்த காலங்களில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க விதித்துவந்த முட்டுக்கட்டைகளை விலக்கிக்கொள்ள முன்வந்தது. இதையடுத்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா குழு முறைப்படி அறிவித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் அக்பரூதீன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவித்துள்ளது. ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து நமது முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்’’ எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்