ஊழியர்களுக்கு தங்க மோதிரம்... நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து! நெகிழ வைக்கும் டீ கடை ஓனர்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 300 நாட்கள் வேலை பார்த்தால் ஊழியர்களுக்கு தங்க மோதிரம் கொடுக்கும் உரிமையாளரின் செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கேரளம் மாநிலம், கண்ணூர் மாவட்டம் பாட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து சென்னைக்கு டீ கடை வேலைக்கு சென்ற இவர், தற்போது 5 கடைகளுக்கு ஓனராக இருக்கிறார்.

இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், ஒவ்வொரு மே தினத்தின் போதும் தன்னுடைய கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்துவார்.

இதனால் இது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் கேரளாவிலிருந்து சென்னைக்கு வேலை தேடி சென்ற போது, சிந்தாரிப்பேட்டையில் உள்ள டீ கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

அங்கு மூன்று ஆண்டுகளாக வேலை செய்த நான், அதன்பிறகு 8 கடைகளில் வேலை செய்தேன். அந்தக் காலகட்டத்தில் சென்னை நகர டீ கடை தொழிலாளர்கள் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தோம். அதன் மூலம் டீ கடை தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்துவருகிறோம்.

அப்படி டீ கடை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அந்த வழக்கில் 60,000 ரூபாய் எனக்கு நீதிமன்றம் வழங்கியது, அந்த பணத்தை வைத்து முதலில் அடையாறு பகுதியில் டீ கடை ஒன்றை துவங்கினேன்.

கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியினால் நல்ல வருமானம் கிடைக்கவே, அடையாறு, பெருங்குடி என சென்னையில் இருக்கும் முக்கிய ஐந்து இடங்களில் சிக்காக்கோ என்ற பெயரில் டீ கடையை துவங்கினேன்.

தற்போது வரை 45 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப 400 முதல் 1000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மே தினத்தின் போது டீ கடைகள் முன்பு சிஐடியூ கொடி ஏற்றப்படும். தொழிலாளர்களுக்கு டீயோடு டிபனும் இலவசமாக வழங்குவோம்.

அதன்பிறகு நட்சத்திரஓட்டல்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று அவர்களுடன் ஆலோசனை வழங்குவோம்.

அப்போது 300 நாள்களுக்கு மேல் வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். அதோடு நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து, அதன் பின் அவர்களுக்கு இன்று முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய வெற்றியின் ரகசியம், கடைக்கு நான் முதலாளி கிடையாது, வரும் வாடிக்கையாளர்கள் தான் முதலாளி, இதனால் நாம் 10 ரூபாய்க்கு டீ கொடுக்கிறோம் என்றால், அது அந்தளவிற்கு தரமானதாக இருக்க வேண்டும் என்று ஊழியர்களிடம் கூறுவேன், அதுமட்டும் தான் ரகசியம் என்று கூறியுள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்