இலங்கை தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது! பாருக் என்பவரை பார்க்க வந்ததாக வாக்குமூலம்.... பின்னணி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

கள்ளத்தனமாக படகு மூலம் உரிய ஆவணங்கள் இன்றி தமிழகம் வந்த இலங்கை தமிழரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார்.

அவரை பொலிசார் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர், இலங்கையில் இருந்து கடந்த 19-ந் திகதி நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு கள்ளத்தனமாக படகு மூலம் உரிய ஆவணங்கள் இன்றி வந்ததும், தஞ்சை கீழவாசலை சேர்ந்த பாரூக் என்பவரை சந்தித்து பேசியதும் தெரிய வந்தது.

அவர் அளித்த தகவலின் பேரில் பாரூக்கையும், ரஞ்சித்தையும் பொலிசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது திருச்சியில் உள்ள ஒரு நபரை சந்தித்ததாக ரஞ்சித் கூறினார். இதனால் இருவரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்கு சென்ற பொலிசார் அந்த நபரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த 2013-ம் ஆண்டில் பாரூக், இலங்கைக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்துள்ளார். அப்போது ரஞ்சித்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் தான் பெரிய பணக்காரன் என்றும், தன்னால் எந்த வேலையையும் எளிதாக முடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதை ரஞ்சித் உண்மையென நம்பி இருந்தார். இந்த நிலையில் இலங்கையில் ரஞ்சித்துக்கு சரிவர வேலையில்லாத காரணத்தினால் தஞ்சைக்கு வர முடிவு செய்தார்.

இதற்காக திருச்சியில் உள்ள ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்படி அவரும் படகில் அழைத்து வந்து பாரூக்கை சந்திக்க வைத்துள்ளார்.

இங்கே வந்த பிறகு தான் பாரூக் கூறியது எல்லாம் பொய் என்பது ரஞ்சித்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி அகதி முகாமில் தங்கியுள்ள தனது மாமன் மகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஞ்சித், தஞ்சைக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு அவர், தான் சம்பளம் வாங்கிக்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

அதுவரை பாதுகாப்பாக தஞ்சையில் இருக்க முடியாது என முடிவு செய்த ரஞ்சித், இலங்கையில் உள்ள ஒருவரை தொடர்பு கொண்டு தன்னை எப்படியாவது மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ளவர் அங்கிருந்து ரஞ்சித் பற்றிய தகவலை தமிழக பொலிசாருக்கு தெரிவித்ததால் அவர் வசமாக சிக்கிக்கொண்டார்.

பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என கூறியுள்ளனர்.

தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers