இலங்கை குண்டுவெடிப்புக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது! தமிழக இளைஞர் பேட்டி

Report Print Kabilan in இந்தியா

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தமிழகத்தின் கோவை மாவட்ட இளைஞர் ஆசிக் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக, அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் உட்பட 7 பேரை கோவை பொலிசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.

அவர்களின் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இந்த வழக்கில் கைதான 7 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கை நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், கோவையில் கைதானவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கோவையில் கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், வீடியோக்களின் அடிப்படையில் இலங்கையில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசுக்கு எச்சரிக்கை செய்திருந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் ஆசிக் கூறுகையில், ‘இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்கவே என்.ஐ.ஏ அதிகாரிகள் முயல்கின்றனர்.

எங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளோம். கைது செய்யப்பட்டபோது எங்களை அடித்து சித்ரவதை செய்து வாக்குமூலம் வாங்கினார்கள். என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த கோபத்தில் எங்களுக்கும், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ தகவல் பரப்புகிறது.

கைதாகி இருந்தபோது என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 முறை காவலில் எடுத்து என்னிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் நல்ல பெயர் எடுக்க எங்கள் மீது பழியை போட பார்க்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான் அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன்.

இலங்கையை சேர்ந்த ஹசீப் தொடர்பான வீடியோக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டும் என்பது மட்டுமே என்.ஐ.ஏ-வின் நோக்கமாக இருக்கிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers