தங்க மங்கை கோமதிக்கு முதல் ஆளாக தேடிச் சென்று உதவிய நடிகர் ரோபோ சங்கர்... குவியும் பாராட்டுகள்

Report Print Santhan in இந்தியா

கத்தாரில் நடைபெற்ற தடகள சாம்பியஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தமிழ் பெண்ணிற்கு நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு தருவதாக அறிவித்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ஆம் திகதி துவங்கிய ஆசிய தடகள போட்டியில் இந்தியா குறிப்பிட்ட வெற்றிகளை பெற்றது.

அதில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த இவர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இப்படி ஒரு பெருமையை சேர்த்துள்ளார்.

இவரின் இந்தச் சாதனையை அரசியல் தலைவர்கள் முதல், சினிமா மற்றும் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தனது பங்காக நடிகர் ரோபோ சங்கர், தமிழக தடகள வீராங்கனை கோமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாகத் தருவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் ரோபோ சங்கர். தனது தந்தை மற்றும் கோச் இறப்பிற்குப் பிறகும், உடல் நலம் பாதிக்கப்பட்டும் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்ற தங்க மங்கை கோமதிக்காக மிகுந்த சந்தோஷப்படுகிறேன்.

ஏனெனில், நானும் கஷ்டப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன்தான். கஷ்டப்படும் குடும்பத்தோட வலி என்னன்னு எனக்குத் தெரியும்.

அதைத் தாண்டி, இந்தச் சாதனையைச் செஞ்சதுக்கு தலைவணங்குறேன். இது பெண்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுக்கக்கூடிய விஷயம். என்னால் முடிந்த சிறிய தொகையைக் கொடுப்பதுக்கு நான் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை அறிந்த கோமதி ரோபோ சங்கருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்