நான் பிரதமர் ஆவேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை! பிரதமர் நரேந்திர மோடி

Report Print Kabilan in இந்தியா

வாழ்க்கையில் துறவியாகத்தான் விரும்பினேன் என்றும், பிரதமர் ஆவேன் என்று ஒருபோதும் கருதியதில்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியுடன் அவரது வீட்டில் கலந்துரையாடினார். அப்போது மோடி தன்னைப் பற்றியும், தனது அரசியல் வாழ்க்கை பற்றியும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் தோன்றியதில்லை. அது எனது பயணத்தில் தானாக அமைந்தது. நாட்டு மக்களும் என்னை வழி நடத்தினர். எனது குடும்பப் பின்னணி, அரசியல் சார்ந்து இருந்தது இல்லை. எனக்கே வியப்பாக இருக்கிறது.

நாட்டு மக்கள் என் மீது அதீத அன்பு வைத்திருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. சிறு வயதில் நூலகம் சென்று நிறைய புத்தகம் படிப்பேன். பெருந்தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை படிக்க மிகவும் விரும்புவேன். எங்காவது ராணுவ வீரர்களையோ, அந்த உடை அணிந்தவர்களையே பார்த்தால் சிறு பிள்ளைபோல் அங்கேயே நின்று சல்யூட் அடிப்பேன்.

20 வயதிலேயே பல இடங்களுக்கு தனியாக சென்றுள்ளேன். நிறைய அனுபவம் கிடைத்தது. ஆனால் குழப்பம் நிறைய இருந்தது. பல விடயங்களில் விருப்பம் இருந்தது. வழி நடத்த யாரும் இல்லை. அடுத்தது என்ன ஆக வேண்டும் என மனதில் பல கேள்விகள் எழுந்தன. பல தடைகளுக்குப் பின் இந்த இடத்துக்கு மக்கள் என்னை அழைத்து வந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தான் தற்போது நகைச்சுவையாக பேசுவதை தவிர்த்து வருவதாகவும், ஏனெனில் தனது பேச்சு திரித்துக் கூறப்பட்டு விடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers