கோவை சிறுமி கொலை விவகாரம்: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

கோவையில் 6-வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களையும் காவல்துறை அறிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை துடியலூரில் கொல்லப்பட்ட சிறுமி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் பிரதீப்- வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

6 வயதான முதல் குழந்தையானது அதே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் குறித்த சிறுமி கடந்த திங்கட்கிழமை காலை வழக்கம் போல பாடசாலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியிருக்கிறார்.

சுமார் 4 மணியிலிருந்து 6 மணி வரை அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சிறுமியை தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அந்த குழந்தை கிடைக்கவில்லை.

இதையடுத்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை சுமார் 7 மணி அளவில் இந்த தம்பதி வசித்து வரும் வீட்டிற்கு அருகே உள்ள சிறிய சந்து பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார்.

காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், குழந்தையின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. பின்னர் சிறுமியின் சடலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே பொள்ளாச்சி பயங்கரத்திலிருந்து இன்னும் கொங்கு மண்டலம் மீளாத நிலையில்,

தற்போது ஒன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...