கோவை 6 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்..பொலிசாரின் முக்கிய அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிசார் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூரில் 6 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்த நாளே வீட்டின் அருகிலேயே குறித்த சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியது தெரிய வந்தது.

அதன் பின்னர், சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்தனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிசார் அறிவித்துள்ளனர். மேலும், துப்புக் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதால் பொலிசார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்