கெட்டு போன இரத்தத்தை செலுத்தியதால் 15 கர்ப்பிணி பெண்கள் மரணம்.... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையின் ரத்த வங்கிகளில் மருத்துவ அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தகுதியற்ற ரத்தத்தை செலுத்தியதன் மூலம் தமிழகத்தில் கடந்த ஜனவரி வரை 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சரியாக பராமரிக்கப்படாமல் பழையதாகிப் போன ரத்தத்தை பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சான்று வழங்கியதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் மருத்துவர் ஏ.எட்வின் ஜோ மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனர் மருத்துவர் என்.ருக்மணி ஆகியோருக்கு பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கடமை தவறிய குற்றத்துக்காக தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அப்பீல் விதிகளின் கீழ் அவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

ரத்த வங்கி சோதனைகள் குறித்து விவரித்த சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், புதிய ரத்தத்துக்கும், பழையதாகி தகுதியிழப்பு ஏற்பட்டுள்ள ரத்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை, மருத்துவ தொழிலில் இல்லாத சாதாரணமான ஒருவரே பார்த்த அளவில் கண்டுபிடித்துவிட முடியும்.

ஆனால் கெட்டுப்போன ரத்தத்துக்கு பாதுகாப்பானது என்று மருத்துவர்களே நற்சான்று கொடுத்திருப்பதுதான் வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்