தந்தை கொடூர கொலை: தனயன் வெறிச் செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கருங்கல் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்த மகன் தந்தையை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே குடியிருந்து வருபவர் 60 வயதான செல்வதங்கம். இவருக்கு அனிஷா (26), அனிஷ் (23), அஜின் (21) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

இதில் அனிஷ் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்று வருகிறார்.

அப்போது கஞ்சா பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. தினமும் கஞ்சா போதையில் பெற்றோரிடமும், அருகில் உள்ளவர்களிடமும் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

அப்போது போதையில் வந்த அனிஷ் தனது பெற்றோரிடம் சொத்தில் தமக்குள்ள பங்கை பிரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனிஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை வெட்டியுள்ளார்.

அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆத்திரம் அடங்காதவர் அருகில் உள்ள கிணற்றில் தந்தையை தூக்கி போட்டுள்ளார்.

கிணற்றுக்குள் விழுந்த செல்வதங்கம் மேலே வர முடியாமல் தவித்தார். இதை கவனித்த அனிஷ் ஒரு சேலையை கட்டி கிணற்றுக்குள் இறங்கி செல்வதங்கத்தை மேலே தூக்கி வந்துள்ளார்.

அதன் பிறகும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அதனால் அருகில் கிடந்த கல்லை எடுத்து செல்வதங்கத்தின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திலேயே செல்வ தங்கம் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மாயமான அனிஷை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்