பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சரண்!

Report Print Vijay Amburore in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மணிவண்ணன் இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் கொடுக்க முன்வராத நிலையில், ஒருவர் மட்டும் தைரியத்துடன் நடந்தவை பற்றி தன்னுடைய வீட்டில் எடுத்துக்கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தேவையான ஆதாரங்களை திரட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை கேள்விப்பட்ட பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் மற்றும் மணி என்கிற மணிவண்ணன் ஆகியோர் புகார் கொடுத்த இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்தே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தாக்குதலில் ஈடுபட்ட பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்த பொலிஸார் ஜாமீனில் விடுவித்தனர். மேலும் பெண்களை மிரட்டி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்த நிலையில், சிபிசிஐடி அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்பம் முதலே இந்த வழக்கில் சிக்காமல் தலைமறையாக இருந்து வந்த மணி என்கிற மணிவண்ணன் கடந்த 13ம் திகதியன்று ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தான்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துளளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்