நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம்: கிண்டலடித்த சீமான்

Report Print Arbin Arbin in இந்தியா

விவசாயிகள் யாரும் உயிருடன் இல்லை எனத் தேர்தல் ஆணையம் எங்களுக்கு விவசாயி சின்னத்தை வழங்கியுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னம் அறிமுக நிகழ்வில் பேசிய சீமான், தேர்தலில் முதன் முதலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்போது தேசியப் பறவை மயிலை சின்னமாக கேட்டேன்.

மயில் உயிருள்ள ஜீவன், அது தேசியப் பறவை எனவே கட்சி சின்னமாக கொடுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையத்தினர் கூறினார்கள்.

தேசிய மலரான தாமரையை மட்டும் எப்படி பாஜகவிற்கு சின்னமாக கொடுத்தீர்கள் ? என்று கேட்டேன்.

அது அப்போது கொடுத்தது என்றார்கள். உயிருள்ள ஜீவனை சின்னமாக கொடுக்க முடியாது என்கிறீர்கள், பின்னர் எப்படி யானையை மாயவதிக்கு சின்னமாக கொடுத்தீர்கள் எனக் கேட்டேன்.

அதுவும் முன்பு கொடுத்துவிட்டோம் என்றார்கள். அப்படியென்றால் காலம் தள்ளி பிறந்தது நாங்கள் செய்த குற்றமா ? காளை மாட்டை சின்னமாக கேட்டேன்.

அதையும் உயிருடன் இருக்கும் ஜீவன் என்பதால் தர மறுத்துவிட்டார்கள். ஆனால் விவசாயியை தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னமாக கொடுத்துள்ளது.

இதுக்கு என்ன அர்த்தம்? எந்த விவசாயியும் உயிருடன் இல்லை எனத் தேர்தல் ஆணையம் கருதிவிட்டது.

இதை ஏன் எங்களுக்கு சின்னமாக கொடுத்துள்ளார்கள் என்றால், உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை காப்பாற்றிவிடுவேன் என்பதால்தான்.

அவர்கள் கொடுத்திருப்பது கரும்பு விவசாயிகள் என்ற சின்னத்தை. இங்கு உண்மையில் கரும்பு விவசாயி, கத்திரிக்காய் விவசாயி, தென்னை விவசாயி என்றெல்லாம் கிடையாது. விவசாயி.. விவசாயிதான். தமிழ் முறைப்படி இதை வேளாண் குடியோன் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் சமஸ்கிருத குறுக்கீட்டால் இது விவசாயி என மாறிவிட்டது. காலப்போக்கில் நாங்கள் இதை வேளாண் குடியோன் என மாற்றுவோம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்