மக்களின் பிரச்சனையை தீர்த்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சிகிச்சைக்கு பணம் இல்லாமல் நடந்த சோகம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மக்களின் பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்த பொலிசார் ஒருவர் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா.

காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வரும், இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் நித்திஷ் என்ற 18 வயது மகனும் உள்ளனர்.

நிதிஷ் பூந்தமல்லியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் தேவர்குளம், பாளையங்கோட்டை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணியாற்றிய இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னைக்கு மாறுதலானார்.

இவர் தான் வேலை செய்யும் பகுதி மக்களுடையே நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர்.

குறிப்பாக தான் பணியாற்றும் அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்.

அதுமட்டுமின்றி யாரிடமும் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றக் கூடியவர் என்று பெயர் பெற்றவர்.

இந்நிலையில் கடந்த 3-ஆம் திகதி சென்னை ஐ.சி.எப் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து இவர் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 8-ஆம் திகதி பணியில் இருந்த போது, ராமையாவுக்கு திடீரென்று தலைவலி ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைவலி அதிகமாகி துடித்ததைப் பார்த்து, மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்த போது, ராமையாவின் மூளைக்குச் செல்லும் நரம்பில் கோளாறு இருப்பதாகவும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு லட்சக்கணக்கில் செல்வாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ராமையாவின் குடும்பத்தினரிடம் அந்தளவிற்கு பணம் இல்லை. புதிய இடத்துக்கு மாறுதலாகி வந்ததால் பணத்தை ஏற்பாடு செய்வதிலும் குடும்பத்தினருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

ஆனால், அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.

நேர்மையான அதிகாரியாகச் செயல்பட்ட ராமையாவிடம் போதிய பணம் இல்லாததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்