என் தந்தை கொலையில் தொடர்புடைய 7 பேரையும் மன்னித்துவிட்டோம்! ராகுல் காந்தி

Report Print Kabilan in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் மீதும் எந்த விதமான வெறுப்பும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தமிழகத்தில் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடலில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.

அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்த நிலைப்பாடு பற்றி மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘கடந்த 1991ஆம் ஆண்டு என்னுடைய தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி இரு நோக்கத்துக்காக கொல்லப்பட்டார். முதலாவது தனிப்பட்ட காரணங்களுக்கானது. அதை நாங்கள் சந்தித்து வருகிறோம்.

இரண்டாவது சட்டரீதியானது. சட்டரீதியான விடயங்கள் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் 7 பேரையும் நாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டோம். எந்தவிதமான வெறுப்பும், விரோதமும் யார் மீதும் இல்லை.

அவர்கள் விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது அவசியம். அதுதான் சிறந்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்