விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தரதரவென இழுத்துச் சென்ற பொலிஸ்

Report Print Kabilan in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், இதுவரை திருநாவுக்கரசு உட்பட 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே போராட்டதில் குதித்தனர்.

காலை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், டி.எஸ்.பி ஜெயக்குமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இதனால் மாலை 4 மணியளவில் போராட்டம் நீடித்தது. அப்போது திடீரென அதிகப்படியான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர். அத்துடன் தண்ணீரை பீச்சி அடிக்க கூடிய வஜ்ரா வாகனங்கள், கலவரத்தை கலைக்கக்கூடிய வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக பொலிசார் அகற்ற முற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு மனித சங்கிலி போல அமைத்துக் கொண்டு கலை மாட்டோம் என கோஷமிட்டனர்.

எனினும், பொலிசார் வலுக்கட்டாயமாக மாணவ, மாணவிகளை பிடித்து இழுத்துத் தள்ளி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொலிசார் அங்குள்ள கடைகள் அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளைய தினம் இன்னும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என மாணவ, மாணவிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers