பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் அனைத்து விதத்திலும் பதிலடி கொடுக்க தயார்: இந்தியா

Report Print Balamanuvelan in இந்தியா

மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலை நடத்தினால், அந்நாட்டுக்கு பதிலடி தருவதற்கு இந்தியா அனைத்து விதங்களிலும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமாவில் துணை ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

புல்வாமா சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானின் பாலகோட்டிற்குள் நுழைந்த இந்திய விமானப்படை, அங்கு தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் சுமார் 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்கிற விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

இதன் பின்னர் விமானப்படை விமானி அபிநந்தன் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்ட விவகாரம் போன்ற சம்பவங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூதரக ரீதியிலும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை நாடியுள்ள இந்தியா, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகிய மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இதற்கு பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இதற்கிடையில், ஒரு பக்கம் கடந்த வாரம் கூட, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் மசூத் அசார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் இன்னொரு பக்கம் அவர் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் பரவின.

இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானிடம் இருந்து மற்றொரு தீவிரவாத தாக்குதல் வராது என்று கூறுவதற்கு எவ்வித உறுதியும் இல்லை என கருதப்படுகிறது.

அப்படி ஒருவேளை மீண்டும் பாகிஸ்தான் வாலாட்டினால், அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் அனைத்து விதத்திலும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers