உண்மையான ஹீரோக்களுக்கு முன் நடிப்பதை நிறுத்துங்கள்! மோடியை விளாசிய தமிழ் நடிகர்

Report Print Kabilan in இந்தியா

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள், உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று ஹீரோ போல நடிப்பதை நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சித்தார்த் விளாசியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன்.

நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது. உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன்.

நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன’என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும் தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சித்தார்த்தின் ட்வீட் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘26/11 பயங்கரவாதத் தாக்குதலின்போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அப்போது விமானப்படையினர் தாக்குதல் நடத்துகிறோம் என்று கேட்டதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனுமதி அளிக்கவில்லை. ஆனால், மோடி அரசு படையினருக்கு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers