விமானப்படை தாக்குதல் நடத்திய இந்தியா! வெடிகுண்டுகளுக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கப் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு உபயோகிக்கப்பட்ட வெடிகுண்டுகளுக்கான செலவுகள் குறித்து தெரியவந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம் மீது நேற்று அதிரடி தாக்குதல் நடத்தி முகாமை தகர்த்தார்கள்.

12 விமானங்கள், சுமார் 1,000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தார்கள்.

இந்த நிலையில், தீவிரவாத முகாம்களை அழிக்க இந்திய விமானப்படை பயன்படுத்திய 1,000 கிலோ வெடிகுண்டுகளுக்கான செலவு சுமார் 1.68 கோடி ரூபாய் முதல் 2.2 கோடி ரூபாய் வரைதான் ஆகியிருக்கும் எனப் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட 3 இடங்களிலும் 4 முதல் 5 வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இவை ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 56 லட்சத்திலிருந்து 73.5 லட்சம் வரை இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய 12 மிராஜ் ரக போர் விமானங்களின் மொத்த மதிப்பு சுமார் 2,868 கோடி ரூபாய். இவற்றின் ஒவ்வொன்றின் மதிப்பும் தலா 214 கோடி ரூபாய். குவாலியர் விமானத் தளத்திலிருந்து இவை புறப்பட்டுச் சென்றன.

இந்த விமானங்களுக்குப் பாதுகாப்பாகவும், எதிரி விமானங்களைக் கண்காணிக்கவும் துணையாகச் சென்ற விமானங்களில், பஞ்சாப் மாநிலம், பதிந்தா விமானத் தளத்திலிருந்து சென்ற AWACS (Airborne Warning And Control System)எனப்படும் கண்காணிப்பு விமானங்களின் மதிப்பு 1,750 கோடி ரூபாய்.

எரிபொருள் தேவைப்பட்டால் நடுவானிலேயே நிரப்பிக்கொள்வதற்கான வசதி கொண்ட எரிபொருள் நிரப்பும் விமானங்களின் மதிப்பு 22 கோடி ரூபாய். இந்த விமானங்கள் ஆக்ராவிலிருந்து புறப்பட்டுச் சென்றன.

விமானப்படையின் ரகசிய விமானத் தளத்திலிருந்து சென்ற இந்திய விமானப் படையின் உளவு விமானங்களின் மதிப்பு 80 கோடி ரூபாய். இவையெல்லாவற்றையும் விட பாகிஸ்தான் விமானப்படைக்குப் பீதி ஏற்படுத்திய 3 சுகாய் விமானங்களின் மதிப்பு 1,074 கோடி ரூபாய் ஆகும். இவை ஒவ்வொன்றின் மதிப்பும் தலா 358 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் தாக்குதலுக்கு உதவியாகப் பயன்படுத்தப்பட்ட ஐந்து மிக் 29 ரக விமானங்களின் மதிப்பு 770 கோடி ரூபாயாகும். இவை ஒவ்வொன்றின் மதிப்பும் தலா ரூ. 154 கோடி ரூபாயாகும். மொத்தத்தில் தாக்குதலுக்குச் சென்ற அனைத்து விமானங்களின் மதிப்பு சுமார் 6,264 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers