பிறந்த நாளில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை! சென்னை காவலரின் பரிதாப முடிவு

Report Print Kabilan in இந்தியா

சென்னை ஐ.ஜி.அலுவலகத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3வது பட்டாலியனில் காவலராக பணிபுரிபவர் மணிகண்டன்(27). இங்கு இன்று காலை 5 மணி அளவில் மணிகண்டன் சீருடையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சரிந்தார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ந்துபோன பிற காவலர்கள் விரைந்து வந்தனர்.

மணிகண்டனின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும், ஆனால் அவர் ஏற்கனவே பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே அவர் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்கள் சென்னைக்கு விரைந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் மணிகண்டனின் உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

தனது பிறந்தநாளான இன்று மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers