கௌசல்யா அப்படி என்ன பேசினார்? நடந்தது என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆணவக்கொலையில் தனது கணவனை இழந்து இப்படி ஒரு கொடூரத்தை செய்த தனது பெற்றோருக்கு தண்டனை வாங்கி கொடுத்ததன் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார் உடுமலைப்பேட்டை கௌசல்யா.

கணவர் சங்கர் படுகொலைக்கு பிறகு, கௌசல்யா ஆவணக் கொலைகளுக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவருகிறார்.

தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், "அம்பேத்கர் இந்தியாவை யூனியனாகத்தான் கருதினார். அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது.

தேச மொழி என்று ஒன்று இந்தியாவில் இல்லை. பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை ஒரு அடிமைப்படுத்தும் மாநிலமாகத்தான் இந்தியா நடத்திவருகிறது.

ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் முன்மொழிந்து செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்," என்று கூறிய கௌசல்யா, மக்கள் இந்த திட்டங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு இந்த திட்டங்களை கைவிடவில்லை என்றும், விவசாயிகள் டெல்லிக்கே சென்று போராடியிருந்தாலும் அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்கவில்லை என்றும் கூறி அதனால், தாம் இந்தியாவை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறிய கருத்துக்கள் 'இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி, தேதி குறிப்பிடாமல் அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கௌசல்யா மீது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், குழு அமைத்து ஒருவாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும், அந்த அறிக்கை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் வெலிங்டன் கண்டோன்மெண்ட் தெரிவித்துள்ளது.

அறிக்கை அடிப்படையில், அவர் மீது மேற்கொண்டு நடவடிகை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers