அம்மா- அப்பா இருவரையும் இழந்து தவித்த பிள்ளைகளுக்கு கலெக்டர் செய்த மறக்கமுடியாத உதவி! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெற்றோரை இழந்து தவித்த இளம் பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்ற கலெக்டர் அவரிடம் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை வழங்கிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி (19).

இவர் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கலையரசி (17) என்ற தங்கையும், தினேஷ் (15) என்ற தம்பியும் உள்ளனர்.

கலையரசி வாலாஜாவில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டும், தினேஷ் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இவர்களின் தந்தை வெங்கடேசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

தந்தை இறந்த பின் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில், இவர்களின் அம்மாவும் கடந்த நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழரசி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் தனது தாயார் உடல்நிலை குறித்தும், தனது குடும்ப சூழ்நிலை குறித்தும் மனு கொடுத்திருந்தார்.

அதன் பின் சாந்தியின் சிகிச்சைக்காக கலெக்டர் உதவினார். இருப்பினும் சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாந்தி அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில்

சாந்தியின் பணியிடத்தை வாரிசு அடிப்படையில் அவரது மகள் தமிழரசிக்கு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து அதற்கான பணிநியமன ஆணையை தமிழரசியின் வீட்டிற்கே நேரில் சென்று கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

தமிழரசியின் தங்கை கலையரசிக்கு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அதன் பின் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார். அதுமட்டுமின்றி தமிழரசியிடம் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

தமிழரசி இது குறித்து கூறுகையில் கலெக்டர் கந்தசாமி எனக்கு வழிகாட்டி என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து தமிழரசி, கலையரசி, தினேஷ் மற்றும் அவர்களது பாட்டி ஆண்டாள் உள்ளிட்டோர் கலெக்டருக்கு மணமுருக நன்றி கூறினர்.

கலெக்டரின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்