குழந்தைகளுக்கு பாலில் அரளிவிதை கலந்த தாய்! சாகும் தருவாயில் வீட்டில் அழுதபடி இருந்த பெண்ணின் சோக பின்னணி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவர் உயிரிழந்த சோகத்தில் தன்னுடைய குழந்தைகளை விஷம் கொடுத்துவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்தவர் அருளழகன் (32). இவருக்கு சத்யா(27) என்ற மனைவியும் காவியா(10), அக்‌ஷயா(5) என்ற 2 மகள்களும், அகிலன்(2½) என்ற மகனும் உள்ளனர்.

காவியா ராமநத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த வேதனையடைந்த அருளழகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் திகதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்துவிட்ட காரணத்தினால் சத்யா வருமானம் இல்லாமலும், குழந்தைகளை வளர்க்க முடியாமலும் வறுமையில் வாடியுள்ளார்.

இதன் காரணமாக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் சுமையும் அதிகமாகியுள்ளது. மிகுந்த மன வேதனையடைந்த சத்யா தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.

தான் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடுவார்க்ள் என்று குழந்தையைகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி அரளி விதையை மிக்சியில் அரைத்து, அதை பாலில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார்.

தாய் கொடுப்பது விஷம் என்று தெரியாமல் காவியா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேருக்கும் வாங்கி குடித்தனர். பின்னர் விஷம் கலந்தபாலை சத்யாவும் குடித்தார்.

சிறிது நேரத்தில் சத்யா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் அங்கு மயங்கி விழுந்தனர்.

ஆனால் காவியா மட்டும் மயங்கி விழாமல் அழுதபடி வீட்டில் இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்ப்பக்கத்தினர் உடனடியாக குழந்தை மற்றும் சத்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சத்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் காவியா உள்ளிட்ட 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அகிலன் பரிதாபமாக உயிரிழந்தான். காவியா, அக்‌ஷயா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்