வெளிநாட்டில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன் என மோசடி... சென்னையில் தங்கி செய்துவந்த திடுக்கிடும் செயல்

Report Print Raju Raju in இந்தியா

பாங்காக் நாட்டில் வேலை பார்க்கும் லட்சாதிபதி என்று அறிமுகமாகி இளைஞர்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து செல்லும் கொள்ளையனை பொலிசார் தேடி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த கோபிநாத் என்ற இளைஞரை சில தினங்களுக்கு முன்னர் அனுகிய நபர் ஒருவர் தன்னை பாங்காக் ரிட்டர்ன் என அறிமுகப்படுத்தி கொண்டார்.

பாங்காக்கில் லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை பார்ப்பதாகவும், உங்களுக்கும் பாங்காக்கில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர் சம்பவத்தன்று சாய்பாபா கோவிலில் ஒரு மாதம் அன்னதானம் வழங்கப் போவதாக கூறி அதற்கு உரிய பொருட்களை வாங்க 2 லட்சம் ரூபாயை கையோடு கவரில் சுற்றி எடுத்து வந்திருப்பதாக கூறி பாங்காக் ரிட்டர்னான மர்மநபர் கோபிநாத்திடம் கொடுத்தார்.

கோபியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை அழகாக இருப்பதாக கூறி வாங்கி தனது கழுத்தில் அணிந்துள்ளார் அந்த மோசடி ஆசாமி.

கோபியின் வாகனத்தில் சென்று பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் பொருட்கள் வாங்குவது போல நடித்த அவர், இரு சக்கர வாகனத்தை விட்டு கோபி வருவதற்கு முன்பாக 5 சவரன் தங்க சங்கிலியுடன் தலைமறைவாகிவிட்டார்.

கோபியோ கையில் இருந்த 2 லட்சம் ரூபாய் கவரை பிரித்து பார்த்த போது அதற்குள் தினசரி நாளிதழ்களை ரூபாய் நோட்டு வடிவில் மடித்து ரப்பர் பேண்டால் கட்டி வைத்து ஏமாற்றி இருப்பதை உணர்ந்து அதிர்ந்து போனார்.

அதே போல ஒரு வருடத்திற்கு முன்பு சோழிங்க நல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் அவர் கடைக்கு அருகே உள்ள கோவிலுக்கு வெள்ளியில் கேட்டு அமைத்து தருவதாக ஆசைவார்த்தை கூறி பழகி உள்ளார்.

அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி அழகாக இருப்பதாக கூறி வாங்கி அணிந்து கொண்டு போட்டோ எடுக்க கூறி உள்ளார்.

சதீஷ்குமார் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது அவரது கவனத்தை திசை திருப்பிய மோசடி நபர், அங்கிருந்து தங்க சங்கலியுடன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது

இதே பாணியில் சென்னையில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் தங்க சங்கிலிகளை வினோத முறையில் பறித்துச்சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த கொள்ளையனை விரைவாக கண்டு பிடிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் அந்த மோசடி ஆசாமியை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்