எட்டி உதைத்தார்கள்... கண்ணீருடன் களத்தில் நின்றேன்: பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் சங் பரிவார் அமைப்புகளின் கலவரத்தைப் பதிவுசெய்தபோது தாக்குதலுக்கு உள்ளானபோதும், வலியைத் தாங்கிக்கொண்டே கலவரத்தைத் தொடர்ந்து பதிவுசெய்துள்ளார் தனியார் டிவி-யின் பெண் ஊடகவியலாளர் ஒருவர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து (44), மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா (42) ஆகிய இரு பெண்களும் நேற்று அதிகாலை காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இச்சம்பவத்தால் கேரளாவில் வன்முறை வெடித்துள்ளது. பெண்கள் வழிபட்டதைக் கண்டித்து கேரளாவில் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது.

மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியினரும் மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கைரளி டிவி-யின் பெண் ஊடகவியலாளர் ஷாஜிலா அப்துல்ரகுமான் என்பவருக்கு சபரிமலைக்குப் பெண்கள் சென்று வந்தது தொடர்பாக பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துப் பேச அசைன்மென்ட் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதை முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச்செயலகம் வழியாகத் திரும்பியுள்ளார்.

இவர் திரும்பும்போது மூன்று வாரங்களாகத் தலைமைச்செயலகம் முன்பு போராட்டம் நடத்திவரும் சங் பரிவார் அமைப்புகள், திடீரென தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கு இருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கிழித்தெறிந்தவர்கள், திடீரென அங்கிருந்த பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். இதைப் பார்த்த ஷாஜிலா, தான் வைத்திருந்த கமெரா மூலம் அங்கு நடந்தவற்றைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால், அவரையும் விடாமல் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அந்தக் கும்பல் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். மிரட்டலைக் கண்டுகொள்ளாமல் நான் வேலையைத் தொடர்ந்தேன்.

ஆனால், அவர்கள் தகாத முறையில் என்னைப் பின்னால் எட்டி உதைத்தார்கள். என் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது.

என்னை அறியாமல் அது எனக்கு வலியைத் தந்தது. நான் வலியால் தவித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கும்பல் எனது கமெராவைப் பிடுங்க முயன்றது.

ஆனால், எப்படியோ தடுத்துவிட்டேன். நேற்று நடந்த சம்பவங்களை எப்போதும் நான் மறக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்