உயிருக்கும் மேலாக காதலிக்கிறேன் அம்மா... உள்ளங்கையில் எழுதி வைத்த 12 வயது சிறுமி: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் தாயை உயிருக்கு உயிராக நேசிப்பதாக கூறி உள்ளங்கையில் எழுதி வைத்து 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமியின் தற்கொலைக்கு அவரின் பாடசாலை ஆசிரியரே காரணமென தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் சிறுமியின் தாயார் பணி நேரம் முடித்து குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், சிறுமி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை அறிந்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் சிறுமியின் உடலை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட பரிசோதனையில், குறித்த சிறுமி தனது உள்ளங்கையில், தாயாரை உயிருக்கு உயிராக நேசிப்பதாகவும், இந்த உலகத்தை விட்டே செல்கிறேன் எனவும் எழுதி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறுமியின் நடத்தை சரியில்லை என மொத்த மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை ஆசிரியர் கிண்டலடித்ததே சிறுமியின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதே ஆசிரியர் பல முறை குறித்த சிறுமியை கேலி செய்ததாக சிறுமியே தனது தாயாரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் பொலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக டெல்லி பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்