வாழ்க்கை இப்போது அழகாக இருக்கிறது... 65 வயதில் பள்ளிக்கு செல்லும் முதியவரின் நெகிழ்ச்சி வார்த்தைகள்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர், தினமும் சிறுவனைப் போல பள்ளி சென்று வருகிறார்.

அமேத்தி தத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நான்ஹி லால்(65). மாந்தோப்பு காவலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு, ஒருநாள் பள்ளி சென்று படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு பள்ளியில் சேர முடிவெடுத்தார்.

தனது சிறுவயதில் வறுமையின் காரணம் மட்டும் இன்றி, அப்போது பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் காட்டுப்பூனையின் தாக்குதலுக்கு ஆளானதையும் பார்த்து ஏற்பட்ட பயத்தால் நான்ஹி பள்ளிக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக அவருக்கு படிப்பறிவு கிடைக்காமல் போனது. அதன் பின்னர் தான் மாந்தோப்பில் காவலாளியாக சேர்ந்துள்ளார். இவருக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நான்ஹி மாந்தோப்பில் இருந்தபோது சிறுவர்கள் சீருடை அணிந்து மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வதை பார்த்துள்ளார்.

இதனால் தானும் பள்ளியில் சேர முடிவெடுத்த நான்ஹிக்கு, தனது பொழுதை கழிப்பதற்கும் இதுவே சிறந்த வழியாகவும் தோன்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ளார் நான்ஹி லால். ஆனால் ஓரளவுக்கு கூட எழுத, படிக்க தெரியாதவராக அவர் இருந்ததால், 6ஆம் வகுப்பில் இருந்து தொடங்கும் அந்த பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை.

எனவே, எழுத்துப் பயிற்சி முகாமில் சேர்ந்த நான்ஹி லால் எழுதுவதில் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தன்னம்பிக்கையுடன் பள்ளியில் சேர விண்ணப்பித்தார்.

இம்முறை அவருக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. ஆனால், வயதானவர் என்பதால் நிபந்தனையுடன் அவர் சேர்க்கப்பட்டார். அதாவது வருகை பதிவேட்டில் அவரது பெயர் சேர்க்கப்படாது, எனினும் வகுப்பில் கலந்துகொண்டு சக மாணவர்களுடன் படிக்கலாம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 6ஆம் வகுப்பில் சேர்ந்த நான்ஹி லால், தற்போது 8ஆம் வகுப்பு படிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘குழந்தைகளுடன் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். தேர்வுகள் மற்றும் பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்கிறேன்.

வாழ்க்கை இப்போது மிகவும் அழகாக இருக்கிறது. இந்த குழந்தைகள் என்னை பாசத்துடன் தாத்தா ஜி என்று அழைக்கிறார்கள். கற்றுக்கொள்வதற்கு என்றும் முடிவு இல்லை.

புத்தக் அறிவைப் பெறுவதற்கு இதுவே எனக்கு சரியான நேரமாக இருக்கலாம். எனது சகோதரியுடன் நான் வீட்டில் தங்கியிருக்கிறேன். இந்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

நான்ஹி லாலின் ஆசிரியர் கூறுகையில், எந்தவொரு மோசமான கால சூழ்நிலைகளிலும் இவர் பள்ளி வகுப்பை தவறவிடுவதில்லை. மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும்போது படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், நாங்கள் அவருக்கு உதவுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்