வெளிநாட்டில் பிள்ளைகள்.. கணவன்- மனைவியை கொன்றது எப்படி? குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் புதுச்சேரியில் ஓய்வு பெற்ற வழக்கறிஞரும் அவரது மனைவியும் சொந்த வாகன சாரதியாலையே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ஒருவரும் அவரது மனைவியும் இரு நாட்களுக்கு முன்பு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த புதுவை காவல்துறை கொலையாளிகளைக் கண்டுபிடித்து விட்டது. வழக்கறிஞரின் வாகன சாரதியே இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் நான்கு மாதங்களுக்கு முன்பு சாரதியாக வேலைக்குச் சேர்ந்தவர் காசிம்.

பாலகிருஷ்ணன் செல்வ செழிப்பைக் கண்டு அதை அடையும் ஆசை கொண்டிருக்கிறார் சாரதி காசிம்.

மட்டுமின்றி பாலகிருஷ்ணன் தம்பதியினரின் மூன்று வாரிசுகளும் குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து கொள்ளையடிக்கும் நோக்கில் சதித்திட்டம் தீட்டி தானும் தன் நண்பனும் வீட்டினுள் நுழைந்ததாக காவல்துறை விசாரணையில் காசிம் கூறி இருக்கிறார்.

தனது நண்பனை மெத்தை தைப்பவனாக நடிக்க வைத்து பாலகிருஷ்ணனின் வீட்டுக்குள் அழைத்து வந்த காசிம், அவன் படுக்கையறைக்குள் இருந்த மெத்தையை சோதிப்பதாக நடித்துக் கொண்டிருக்கையில் அறைக்குள் வைத்து பாலகிருஷ்ணன் தம்பதியினரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக கூறி இருக்கிறார் காசிம்.

இந்த விவகாரம் தொடர்பில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் பிள்ளைகள் வசிக்கும் நிலையில் தனிமையில் வசிக்க நேரும் முதியவர்கள் தங்களது பாதுகாப்புக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியுள்ளது.

  • முதற்கட்டமாக தங்களது வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல்நிலையத்தில் தங்களைப் பற்றிய தகவல்களை முகவரியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • அல்லது காவல்துறை மூலமாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலமாகவும் தங்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்யலாம்.
  • காவலன் செயலி தவிர 1253 என்ற ஹெல்ப் லைன் எண்ணையும் ஆபத்தில் இருக்கும் முதியோர்கள் பயன்படுத்தலாம்.
  • மேலும், வெளியூர் செல்லும் முதியவர்கள் தங்களது முகவரியை காவல் நிலையத்தில் பதிவு செய்துவிட்டுச் செலவ்தும் பயனளிக்கும்.
  • நம்பிக்கையான ஆட்களை வீட்டு வேலைக்கு தெரிவு செய்ய வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக வேலையை விட்டு நிறுத்த வேண்டும்.
  • வீட்டு வேலை ஆட்களின் பெயர் முகவரியுடன் எஜமானர்களின் முகவரியும் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்