10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50,000 ரூபாயை பரிதாபமாக இழந்து நிற்கும் நபர்! சிசிடிவி கமெராவில் கிடைத்த தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பைனான்சியர் ஒருவர் 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு தற்போது 50,000 ரூபாயை இழந்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். வட்டிக்கு பணம் கொடுத்து வரும் இவர் திருவான்மியூர் மேற்கு குளக்கரை தெருவில் இருக்கும் வங்கிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய அக்கவுண்டில் இருந்த 50,000 ரூபாய் பணத்தை எடுத்த இவர், அதன் பின் திருவான்மியூர் மார்க்கெட் பகுதியில் பொருட்களை வாங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து வீட்டிற்கு புறப்படுவதற்காக சைக்கிளின் முன்பக்கத்தில் பணத்தை வைத்துக் கொண்டு சென்றுள்ளார். திருவான்மியூர் கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே செல்லும் போது, அந்த வழியே சென்ற நபர், உங்கள் பணம் சாலையில் கிடக்கிறது என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டவுடன் பூமிநாதன் அந்த நபர் சொன்ன இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கிருந்த 10 ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு மீண்டும் சைக்கிளில் சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்ற அவர், பணம் வைத்திருந்த பையை சைக்கிளின் ஹேண்ட்பாரிலிருந்து எடுக்க முயன்ற போது பையில் பணம் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் அவர் உடனடியாக அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிஸ் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கிருக்கும் சிசிடிவி கமெராவை பார்த்துள்ளனர்.

அப்போது, சைக்கிளில் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் ஒரு வாலிபர் காத்திருந்தார். பூமிநாதன் சைக்கிளுக்குப் பின்னால் பைக்கில் வந்த நபர்தான் அவரிடம் பத்து ரூபாய் கீழே கிடக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

பத்து ரூபாயை பூமிநாதன் எடுக்க சைக்கிளை நிறுத்தியபோது அங்கு காத்திருந்த நபர், பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு பைக்கில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதை வைத்து பொலிசார் அந்த நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்