தமிழர்கள் 7 பேர் விடுதலை விவகாரம்...குடியரசு தலைவருக்கு தெரிவிக்காமலே மத்திய அரசு நிராகரித்தது அம்பலம்

Report Print Santhan in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை மத்திய அரசே நிரகாரித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன் விடுதலை செய்யக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.

அதனைத்தொடர்ந்து 2018 ஏப்ரல் 18-ஆம் திகதி குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி என்று குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் பரி‌ந்துரை கடிதத்திற்கு பதில் அனுப்பியது.

அதில், முன்னாள் பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னு‌தாரணம் ஆகிவிடும் என்பதால், பரிந்துரை கடிதத்தை நிராகரிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தண்டனைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளர்ன் தமிழக அரசின் பரிந்துரை கடிதம் எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் குடியரசு தலைவர் மாளிகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கு குடியரசு மாளிகை 7 பேரின் விடுதலை தொடர்பாக தங்களு‌க்கு பரிந்துரை கடிதம் எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை என்றும், உயர்மட்ட அதிகாரியால் 7 பேரின் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்