இதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த அட்ஷயா: தற்போது எப்படியிருக்கிறார்?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த சிறுமி அட்ஷயா தனது இதய ஆப்ரேஷனுக்காக வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்த நிலையில் அவருக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்யப்படவுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அட்ஷயாவுக்கு பிறக்கும் போதிலிருந்தே இதயத்தில் பிரச்சனை இருந்தது.

இவரின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட தாய் கூலி வேலை பார்த்து சம்பாதிக்கும் வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வந்தது.

இந்நிலையில் கரூர் இணைந்த கைகள் என்ற அமைப்பின் உதவியோடு அக்‌ஷயாவுக்கு கடந்தாண்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அடுத்து 2018 நவம்பர் மாதம் இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் அதற்காக மறுபடியும் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டத் தொடங்கியது இணைந்த கைகள் அமைப்பு.

அந்தப் பணத்தில் 5,000 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிவாரணமாகக் கொடுத்து நெகிழ வைத்தார் அட்ஷயா.

இந்த செய்தி இந்திய அளவில் வைரலான நிலையில் சிறுமியின் நல் உள்ளத்தை பாராட்டி 30-க்கும் மேற்பட்ட பிரபல மருத்துவமனைகளில் இருந்து அட்‌ஷயாவுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய அழைப்பு வந்தது.

இந்நிலையில் அட்ஷயாவிற்கு முதல் ஆபரேஷன் செய்த சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அவரை அழைத்து அவரது கருணைமிகு உள்ளத்தை பாராட்டி இரண்டாவது அறுவை சிகிச்சையை இலவசமாக இந்த மாத இறுதியில் செய்யவுள்ளது.

இது குறித்து அட்‌ஷயா கூறுகையில், கேரள மழை வெள்ள பாதிப்பை டி.வி-யில பார்த்தேன். அதுல பல சிறுமிகளும் பாதிக்கப்பட்டாங்க. அவங்களுக்கு உதவனும்னு தோணுச்சு. அப்போ எனக்கு இதய ஆபரேஷனுக்கு வச்சுருந்த காசுன்னெல்லாம் தோணலை. உதவி செய்யணும்கிற உந்துதலாலத்தான் உடனே 5,000 ரூபாயைத் தூக்கிக் கொடுத்துட்டேன் இப்போ பலரும் பாராட்டறாங்க. நல்லது பண்ணுனா எல்லோரும் பாராட்டுவாங்க என்பது புரிஞ்சுப் போச்சு.

இனிமேல் மத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவணும்னு முடிவு பண்ணி இருக்கேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்