காதலை ஏற்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்! தடுக்க வந்த சகோதரருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இசக்கிமுத்து தனது காதலை குறித்த இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை அப்பெண் ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தனது கையில் இருந்த பிளேடால் இளம்பெண்ணின் முகத்தை கிழித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இசக்கிமுத்து மீது புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் வேலைக்காக சென்னை சென்றுவிட்ட இசக்கிமுத்து, கைப்பேசியில் குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த இசக்கிமுத்து, நேற்று இரவு கைப்பேசியில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, மீண்டும் தனது காதலை ஏற்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போதும் அப்பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இசக்கிமுத்து, காலை நேரத்தில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தூங்கிக்கொண்டிருந்த அவரது கழுத்து, கைகளில் அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த பெண்ணின் அண்ணனையும் வெட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், வெட்டுபட்ட அண்ணன்-தங்கை இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்