கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவழித்து விட்டோம்: கொள்ளையர்களின் வாக்குமூலம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் ரயிலில் துளை போட்டு கொள்ளையடித்த ரூ.5.78 கோடி பணத்தை, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயிலின் சரக்கு பெட்டியில் ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டது. இந்த ரயிலின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு ரூ.5.78 கோடி பணத்தை கொள்ளையடித்தனர்.

சேலம்-விருத்தாச்சலம் இடையே நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் கொள்ளையர்களை பிடிப்பதில் பெரும் சிக்கல் இருந்தது. இதனால், இஸ்ரோ உதவியுடன் கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்த விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோஹர்சிங் தலைமையிலான கும்பல் தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து விரைந்த பொலிசார், சென்னையில் பதுங்கியிருந்த தினேஷ், ரோகன் பார்தி ஆகிய 2 பேரை கடந்த மாதம் 12ஆம் திகதி கைது செய்தனர்.

அதன் பின்னர், கடந்த 5ஆம் திகதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மோஹர் சிங், ருசிபார்தி, கிருஷ்ணா, மகேஷ்பார்தி, பிராஜ்மோகன் ஆகியோரை தமிழக பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால், கொள்ளை சம்பவம் நடந்த மூன்று மாதத்தில் தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால், முழு பணத்தையும் கொள்ளையர்கள் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை என்று கருதிய பொலிசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்