அடுத்தடுத்து மரணமடைந்த 18 பச்சிளம் குழந்தைகள்! காரணம் என்ன?

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் அசாம் மாநில மருத்துவமனை ஒன்றில், அடுத்தடுத்து 18 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்கட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த 9 நாட்களில் மட்டும் 18 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குழந்தைகள் அனைத்தும் பிறந்து ஓரிரு நாட்களே ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ துறையின் இயக்குநர் தலைமையில் விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜோர்கட் மருத்துவமனையின் முதல்வர் இந்த குழந்தைகளின் மரணத்தை உறுதி செய்த நிலையில், மருத்துவமனை உள்ளேயே விசாரணைக்கு உத்தரவிட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த 15 குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிறப்பு பிரிவில் வெறும் 40 குழந்தைகளை வைக்க மட்டுமே இடம் உள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு இறந்த குழந்தைகளில் 10 குழந்தைகள் பிறக்கும்போதே குறைவான எடையுடன் இருந்ததாகவும், இதுவே அவற்றின் இறப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், மற்ற 3 குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பல குழந்தைகள், ஒரு படுக்கையில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக குழந்தைகள் மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்