காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம்... வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை ஆசிரியரே அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்நூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சங்கர்.

இவர் அதே பள்ளியில் படித்த 9ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவி ஆசிரியரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கர் இன்று காலை, மது போதையில் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த மாணவியின் கழுத்தை கத்தியை கொண்டு அறுத்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வேகமாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் அங்கிருந்து தப்ப முயன்ற குற்றவாளி சங்கரை பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers