காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்: ஆத்திரத்தில் குடும்பத்தார் செய்த கொடுஞ்செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் காதலித்த இளம்பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞரை பெண்ணின் வீட்டார் உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொலை முயற்சியில் அந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

திருமண வயது எட்டாத இளம்பெண்ணை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறிய அந்த இளைஞரை, திருமணம் குறித்து கலந்தாலோசிக்க பெண்ணின் வீட்டார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனை நம்பி வந்த இளைஞரை பெண்ணின் வீட்டார் உயிருடன் குளுத்தியதாக கூறப்படுகிறது.

எத்வா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில் நரேந்திர ஷாக்கியா என்ற இளைஞரையே குறித்த பெண் வீட்டார் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பெண் வீட்டாரை பொலிசார் கைது செய்து வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 22 வயதான நரேந்திர ஷாக்கியாவும் அவரது காதலியும் மாயமானதாக தெரியவந்தது.

இதனையடுத்து பெண்ணின் வீட்டார் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இருவரும் திரும்பி வந்தால் திருமணம் நடத்துவது தொடர்பில் கலந்தாலோசிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நேற்று மாலை பெண்ணின் குடியிருப்புக்கு நரேந்திரா தனியாக சென்றுள்ளார். ஒருகட்டத்தில் பெண்ணுக்கு திருமண வயது எட்டவில்லை எனவும், உடனையே அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் செய்து தருவதில் உறுதியான முடிவு எட்டும்வரை பெண்ணை திருப்பி அனுப்ப முடியாது என நரேந்திரா அப்போது தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் நரேந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பெண்ணை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என கேட்டு தாக்கிய நிலையில், அவர் அதை வெளிப்படுத்த மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இளைஞர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனையடுத்து உடல் முழுவதும் தீ எரிய அங்கிருந்து வெளியேறி தெருவில் ஓடிய இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்