உண்மை பற்றி எனக்கும், அர்ஜுனுக்கு மட்டுமே தெரியும்! தொடர்ந்து போராடுவேன்: ஸ்ருதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், சட்டப்படி போராடத் தயார் என்றும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார்.

'நிபுணன்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டு அசவுகரியமாக உணரவைத்தார் என நடிகர் ஸ்ருதி ஹரிஹரன் சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அர்ஜுன் தரப்பு, கன்னட நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் ஸ்ருதியை விமர்சித்து பேசினர். ஸ்ருதி, பத்திரிகையாளர் சந்திப்பில், தான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறினார்.

மேலும், ஸ்ருதி மீது அர்ஜுன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,

தொடர்ந்து ஸ்ருதிக்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி எழ, தற்போது அவர் தன் தரப்பை தெளிவுபடுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஸ்ருதியின் பதிவு

ஒரு செய்தி தவறாக சித்தரிக்கப்படும்போது, சிதைக்கப்பட்டும்போது உண்மை தொலைந்து அது பலருக்கு சாதகமாகிவிடுகிறது.

நடந்த சம்பவத்தில் உண்மை தெரிந்தது இருவர் மட்டுமே. நானும், திரு அர்ஜுன் அவர்களும். அவருக்கு எதிரான என் குற்றச்சாட்டு இது. சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நான் சுயமாக யோசித்து தான் இந்தப் புகாரை சொன்னேன். திரைத்துறையைச் சேர்ந்த பல மரியாத்தைக்குரியவர்கள் சொல்வது போல, நினைப்பது போல, எனக்குப் பின்னால் யாரும் இல்லை.

எனது அறிக்கையில் நான் திரு அர்ஜுன் அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டை முன்வைத்தேன் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அவர் என் மீது மானநஷ்ட வழக்குத் தொடர விரும்பினால், அதை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.

உங்கள் யாருக்கும் எந்த விதமான ஆதாரத்தையும் தர வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. நீங்கள் எதை நம்பவேண்டும் என நினைக்கிறீர்களோ அதை நம்பலாம்.

இந்த விஷயம் நீதிமன்றத்துக்குச் சென்றால், அங்கு எனது ஆதாரங்களை சமர்பிப்பேன். சட்டம் எது சரியான நீதியோ அதை வழங்கும்.

அர்ஜுன் ரசிகர் மன்றங்களிலிருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்கள், மீம்கள், ஒருதலைபட்சமான, உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத சில ஊடகச் செய்திகள் எல்லாம் பார்த்தால், எனக்கு என் உண்மை தெரியும்.

நீங்கள் என்ன வேண்டுமோ அதை செய்யுங்கள். நான் விரும்பியதை நான் செய்கிறேன். மகிழ்ச்சியாக இருங்கள்.

கர்நாடக திரைப்பட சங்கத்தைச் சேர்ந்த திரு முனிரத்னா, திரு சின்னிகௌடா, திரு சா ரா கோவிந்து உள்ளிட்ட மூத்தவர்களே, சங்கத்தில் நீங்கள் இருக்கும் பதிவியில் உங்கள் பொறுப்புகளில் ஒன்று, கலைஞர்களின் உரிமையை பாதுகாப்பது மற்றும் பிரச்சினைகளை தர்க்கப்பூர்வமாக, நடைமுறைக்கு ஏற்றவாறு தீர்த்துவைத்தல். திரைத்துறை, ஆண் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பது நீங்கள் உறுதிசெய்யும் பொறுப்பில் இருக்கிறீர்கள்.

ஆனால் சங்கீதா பட், சஞ்சனா கல்ராணி, ஏக்தா மற்றும் இன்னும் பல பெண்கள் சமீபத்திள் வெளியிட்ட துன்புறுத்தல் புகார்களை வைத்துப் பார்க்கும்போது, திரைத்துறையில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருப்பது விளங்கவில்லையா? ஆனால் அதை விடுத்து நீங்கள் எங்களை ஊடகங்களில் தவறாகப் பேசுகிறீர்கள். கண்ணியமில்லை, பெண்களை வெறுக்கும்படியே பேசியிருக்கிறீர்கள். எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

யார் என்ன சொன்னாலும், நான் என் வார்த்தையில் உறுதியுடன் இருக்கிறேன். எது சரியென்று நான் நினைக்கிறேனோ அதற்காக நான் போராடுவேன். இது நீண்ட, அயர்ச்சி தரக்கூடிய போராட்டமாக இருக்கும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்