விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து!

Report Print Kabilan in இந்தியா

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக ஜெகன்மோகன் ரெட்டி இன்று விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது அருகே வந்த இளைஞர் ஒருவர், செல்ஃபி எடுப்பது போல் நடித்து திடீரென ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், அவருக்கு இடது கையின் தோள்பட்டைக்கு கீழ் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பொலிசார் விரைந்து வந்து குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்து சிறிய வகை கத்தியை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர், உடனடியாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதலுதவி செய்யப்பட்டு, ஹைதராபாத்திற்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். தனது மருத்துவரிடம் ஹைதராபாத்தில் அவர் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த இளைஞரை விசாரித்தபோது அவரது பெயர் ஸ்ரீனிவாஸ் என்றும், விமான நிலைய உணவகம் ஒன்றில் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஸ்ரீனிவாஸிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்