இத்தனை ஆண்டுகள் கழித்து வைரமுத்து மீதான பாலியல் தவறுகளை அம்பலப்படுத்தியது ஏன்? சின்மயி விளக்கம்

Report Print Raju Raju in இந்தியா

வைரமுத்து மீது இத்தனை காலமாக புகார் சொல்லாமல் தற்போது புகார் கூறுவது ஏன் என ஆங்கில சேனலுக்கு சின்மயி விளக்கமளித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து கடந்த 2005/2006 காலக்கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என பாடகி சின்மயி குற்றஞ்சாட்டினார்.

இதற்கு, உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையை காலம் சொல்லும் என வைரமுத்து டுவிட்டரில் தெரிவித்தார்.

இதற்கு வைரமுத்து ஒரு பொய்யர் என பதிலடி கொடுத்தார் சின்மயி.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து இப்படி செய்ததாக கூறும் சின்மயி அதை ஏன் இப்போது தான் வெளியில் சொல்கிறார் என கேள்வி எழுந்தது.

இதற்கு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் பதிலளித்துள்ளார்.

சின்மயி கூறுகையில், ஆம் இவ்வளவு நாளாக எனக்கு இதை சொல்ல தைரியம் இல்லை. அதற்கான சூழ்நிலை இல்லை. இப்போதுதான் அதற்கான சூழல் வந்துள்ளது.

தாங்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லை குறித்து மக்கள் பலரும் தற்போது கூற தொடங்கிவிட்டதால் தான் நானும் அதில் இணைந்துள்ளேன்.

இல்லையென்றால் இந்த விடயம் வெளியில் தெரியாமல் இறுதியில் என் கல்லறைக்கு தான் சென்றிருக்கும்.

இது நடந்தபின்னர் அவர் எழுதிய பாடல்களை நான் பாடியுள்ளேன். அந்த பாடல் பதிவின் போது வைரமுத்துவுடன் நான் தனியாக இருக்க மாட்டேன்.

ஏன், எதாவது பொது நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்டால் கூட அவரை விட்டு விலகியே இருப்பேன். பணி விடயமாக எதாவது பேச வேண்டும் என்றால் மட்டுமே பேசுவேன்.

பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கு துணிச்சல் வேண்டும், அது தான் இந்தியாவின் இன்றைய நிலை. இந்த துணிச்சல் இல்லாததால் பலர் தங்கள் வேலையையே விட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.

திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் இந்த விடயம் குறித்து பேசவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த சின்மயி, யார் பேச வேண்டும், யார் பேச கூடாது என்பதை நான் சொல்ல முடியாது.

அவர்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட பிரச்சனை இருக்கலாம்.

என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களே எனக்கு ஆதரவு தர பயப்படுகிறார்கள், நான் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை.

ஆணோ அல்லது பெண்ணோ இது போன்ற பாலியல் துன்புறுத்தலை அனுபவித்தால் பயப்படாமல் வெளியில் சொல்ல வேண்டும் என சின்மயி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்