கொலைமிரட்டல்: உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இலங்கை அகதிகள் குடும்பத்துடன் தஞ்சம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் அருகே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இலங்கை அகதிகள் குடும்பத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை கங்கைகொண்டானில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுதர்சன் மனைவி நந்தகுமாரி மற்றும் அவரது குழந்தைகள், உறவினர்கள் உள்ளிட்ட 15 பேர் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், நான் மேற்கண்ட முகாமில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

முகாமில் கடந்த 7 ஆண்டாக வசித்து வருகிறோம். எனது கணவர் டீ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 23ம் திகதி எங்கள் முகாமை சேர்ந்த நதீஷ்குமார், கவுதம் ஆகியோர் எங்கள் வீட்டு அருகில் மதுவிற்பனை செய்தனர்.

இதனை எங்களது உறவினர்கள் பிரேம்குமார், ராஜேந்திரன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அடியாட்களுடன் வந்து பிரேம்குமாரை அரிவாளால் வெட்டினர்.

காயம் அடைந்த நிலையில் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அந்த கும்பல் எங்கள் வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி சூறையாடி எங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

புகாரை வாபஸ் பெறும்படி எங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதால் நாங்கள் வீட்டில் குடியிருக்க முடியவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் உறவினரையும் பார்க்க விடாமல் அந்த கும்பல் மிரட்டி வருகிறது. இதனால் நாங்கள் முகாமிற்கு திரும்ப முடியாமல் கடந்த 4 நாட்களாக கங்கைகொண்டான் பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் உயிருக்கு ஆபத்துள்ளதால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் நந்தகுமாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்