கருணாஸின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு? அமைச்சர் சூசகம்

Report Print Arbin Arbin in இந்தியா

அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கருணாஸ் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், அவரது எம்எல்ஏ பதவிக்கு ஆபத்தாக முடியும் என பதிலளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் பதவி என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அத்தகைய பொறுப்பில் தனது கடமை உணர்வை மறந்து நடப்பது தவறு.

அரசியல் அமைப்புச்சட்டப்படி பதவி ஏற்றுக்கொள்பவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்கவேண்டும், அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது.

பொதுவாக பதவி ஏற்கும்போது அமைச்சராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும்சரி அவர் பதவி ஏற்கும்போது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இருப்பேன் என்ற உறுதியோடுதான் பதவி ஏற்கிறோம்.

அதைக் கட்டாயம் கருணாஸ் கடைபிடிக்கவேண்டும். எனவே இந்தப் போக்கு போகும்போது அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியே கேள்விக்குறிதான் என்பது தற்போது வெளிப்படுகிறது.

சட்ட வல்லுநர்கள் அனைவரும் என்ன சொல்கிறார்கள் என்றால் ஏன் கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர வேண்டும் என்று கேட்கிறார்கள்.

பால் தாக்கரே ஒரு வழக்கில் இதுபோன்ற பேச்சால் உச்ச நீதிமன்றம் தெளிவாக வழங்கிய தீர்ப்பில் அவரது ஓட்டுரிமை பறிக்கப்பட்டது.

அவர் ஓட்டே போட முடியவில்லை. நிச்சயமாக இதுபோன்ற பேச்சு பேசுபவர்கள் எல்லாம் இதுபோன்ற நிலை இருந்தால்தான் வாயை மூடிக்கொண்டு அவர்களது சட்டப்பேரவை உறுப்பினர் கடமையை ஆற்றுவார்கள்.

பால்தாக்கரே வழக்கை ஒப்பிடும்போது நிச்சயமாக கருணாஸின் பதவி ஆபத்தில்தான் முடியும் என்கிற கருத்தும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் திகதி ஐபிஎஸ் அதிகாரி ஒருவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வரம்பு மீறி பேசியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமூகங்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசுவது, முதல்வரை அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் என பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers