வீரப்பன் வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் தங்கியிருந்த பிரபல கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார், கடந்த 2000-ஆம் ஆண்டு ஜுலை 30-ம் தேதியன்று, வீரப்பனின் கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார்.

தமிழகம் மற்றும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல கட்ட பேச்சுவார்தைக்கு பின்னர் 108 நாட்கள் கழித்து ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், மல்லு, மாறன், கோவிந்தராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்யா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல்மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது கடந்த 18 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கான குற்றப்பத்திரிக்கை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதேசமயம் வழக்கினை 10 நீதிபதிகள் விசாரித்தும் வந்தனர்.

முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் பொலிசாரின் என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்டனர், மல்லு என்பவரும் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பானது இன்று கோபி செட்டிபாளையம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில், குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லாததால் எஞ்சியுள்ள 9 பேரையும், வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers