நடிகையின் காதலன் கழுத்தறுத்து படுகொலை: கொலையாளியின் பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

திரைப்பட துணை நடிகையின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் திகதி பொலிசார் மீட்டனர்.

காரில் ரத்தமும், தூவப்பட்டிருந்த மிளகாய் பொடியும் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில், இந்த கார் கொடைக்கானலை சேர்ந்த பிரபாகரனுக்கு (28) சொந்தமானது என தெரிந்தது.

ஆகஸ்ட் 24ம் திகதி இரவு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் வீடு திரும்பவில்லை. சிட்டி டவர் என்ற வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பிரபாகரனின் உடல், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், கடைசியாக பிரபாகரன் செல்போனுக்கு பேசியது அவரது நண்பரான மற்றொரு கார் டிரைவர் செந்தில்குமார்(37) என்பது தெரிந்தது. இதனால் அவரைப் பிடித்து பொலிசார் விசாரித்ததில், தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்துக்காக பிரபாகரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

செந்தில்குமாரை கைது செய்த பொலிசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலையில் தொடர்புடைய மணிகண்டன் (28), முகமது சல்மான் (20), அவரது தம்பி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கைதான செந்தில்குமார் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சென்னை, திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவரது மனைவி, துணை நடிகை விஷ்ணுபிரியா.

விஷ்ணுபிரியாவின் தந்தை தொழிலதிபர் சூரியநாராயணன் ஐதராபாத்தில் உள்ளார். இவருக்கு கொடைக்கானலில் வீடு, நிலம் இருக்கிறது.

மனநிலை பாதிப்பில் இருக்கும் ரமேஷ்கிருஷ்ணனை கொடைக்கானலில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்து, சிகிச்சை அளிக்கின்றனர்.

அவரை பார்க்க விஷ்ணுபிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்து சென்றுள்ளார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து செல்லும் விஷ்ணுபிரியாவை கொடைக்கானலுக்கு அழைத்து வரவும், மீண்டும் விமானநிலையம் அழைத்துச் செல்லவும் பிரபாகரன் தனது காரை எடுத்துச் செல்வார்.

இதில் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனுக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பழக்கம் அதிகரித்து,

ரூ.15 லட்சம் வரை பிரபாகரனுக்கு விஷ்ணுபிரியா கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு விஷ்ணுபிரியா கொடைக்கானல் வந்தபோது, ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தவர்,

அருகில் பிரபாகரனை வைத்துக் கொண்டு, தனது தந்தை சூரியநாராயணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, பிரபாகரனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

ஆகஸ்ட் 24ம் திகதி இரவில் போனில் தெரிவித்தபடி, பிரபாகரன் குறிஞ்சி ஆண்டவர் கோயிலருகே வந்தார். அவரை அழைத்து சென்று மதுகுடிக்க வைத்து, குடிபோதையில் இருந்த அவரை காருக்குள் வைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றோம். உடலை வனப்பகுதியிலுள்ள பள்ளத்தில் வீசினோம்.

காரை உகார்தே நகரில் நிறுத்திவிட்டுச் சென்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தாக பொலிசார் கூறினர்.

தலைமறைவான சூரியநாராயணனை தேடி தனிப்படை பொலிசார் ஐதராபாத் விரைந்துள்ளனர். கள்ளக்காதலனை, நடிகையின் தந்தையே கூலிப்படை ஏவி கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்