ஏழாவது மாடி... 4 வயது குழந்தை: நெஞ்சை உறைய வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சென்னையில் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூ என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தி 7-வது தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கோபால் தனது மனைவி கீதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் தங்கியுள்ளார்.

குடியிருப்பின் பிற வீடுகளின் பால்கனிகளில் முறையான தடுப்புக் கம்பிகள் உள்ள நிலையில் இது அலுவலகம் என்பதால் முறையான தடுப்புக் கம்பிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கீதா தமது 4 வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கைக்குழந்தையுடன் கீழ் தளத்துக்கு வந்துள்ளார்.

இதனிடையே கண்விழித்த 4 வயது குழந்தை சாரதா அம்மாவை தேடியுள்ளது. அம்மாவை தேடி பால்கனி பகுதிக்குச் சென்ற சாரதா அங்கிருந்து எட்டிப்பார்த்தபோது திடீரென தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் குழந்தை சாரதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சூளைமேடு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்