தமிழகத்திலிருந்து ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் கேரள மக்களுக்கு பலர் தாமாக முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சத்யகோபால் கூறுகையில், ‘கேரளாவிற்கு அதிகபட்ச நிவாரணம் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்பட்டுள்ளன. 241 லொறிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 306 டன் அரிசி, 230 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பிவிட்டோம்.
ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் பொருட்களை அனுப்பி உள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 226 மருத்துவ முகாம்களை அமைத்து உதவி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.