மழைவெள்ளத்தில் நீந்தியே நிவாரண முகாமை அடைந்த முதியவர்: குடும்பத்தை தேடும் சோகம்

Report Print Kabilan in இந்தியா

கேரளாவில் தனது வீட்டில் இருந்து நீந்தியே நிவாரண முகாமிற்கு வந்த 76 வயது முதியவர் ஒருவர், தனது குடும்பத்தினரை தேடி வருகிறார்.

கேரள மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில், 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டதால் அம்மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இந்த மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் செங்கானூரும் ஒன்று. இங்குள்ள பல பகுதிகள் 10 அடிக்கும் அதிகமான அளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக, இப்பகுதியில் இருந்த பலர் வெளியேறினர். இந்நிலையில் செங்கானூருக்கு அருகே உள்ள குட்டநாடைச் சேர்ந்த கருணாகரன்(76) என்ற முதியவர், தனது மனைவி, மருமகள் மற்றும் பேத்திகள் அனைவரையும் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் தான் மட்டும் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் மழை வெள்ளம் அதிகரித்ததால் வீட்டில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், கருணாகரன் தனது மகனின் கைப்பேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு தண்ணீரில் நீந்தியே செம்பக்குளம் பகுதிக்கு வந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவாம்படி பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைத்தனர். அதனைத் தொடர்ந்து, கருணாகரன் தனது மகனை கைப்பேசியில் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் தனது குடும்பத்தினருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்