கொலை, கொள்ளை என 20 ஆண்டுகளாக சாம்ராஜ்யம் நடத்திய ’காட் மதர்’ கைது!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் கொலை, கொள்ளை என இருபது ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த பெண் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள சங்கம் விஹார் காட்டுப் பகுதியில் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் குறித்த இளைஞரின் பெயர் மிராஜ்(21) என்பதும், அவர் முன்னிபேகம் என்பவரது மகளை காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவன், இதற்கு பின்னால் இருப்பது ‘காட் மதர்’ என்று கூற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முன்னிபேகம் தனது மகளை காதலிக்கும் மிராஜை கொலை செய்ய வேண்டும் என ‘காட் மதர்’ பாசிரனை அணுகியுள்ளார்.

பாசிரன் தனது மகன்களுடன் சேர்ந்து மிராஜை கொன்று புதைத்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பாசிரனை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கினர். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் பொலிசாரின் வலையில் இருந்து தப்பிய பாசிரன், தற்போது சிக்கியுள்ளார்.

மேலும், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரது பின்னணியை அறிந்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பாசிரன்(62), 40 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானை சேர்ந்த மால்கான் சிங் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர், 80களில் டெல்லிக்கு வந்த அவர் சங்கம் விஹார் பகுதிக்கு குடியேறினார். வசதியாக வாழ நினைத்த அவர், முதலில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் 90களில் பல பெரும் குற்றவாளிகளுடன் பாசிரனுக்கு தொடர்பு ஏற்பட்டது.

பாசிரனுக்கு மொத்தம் 8 மகன்கள். அவர்களை வைத்து கொலை, கொள்ளை, என இருபது ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்துள்ளார் பாசிரன். இவரது குடும்பம் செய்யும் குற்றங்கள் குறித்து பொலிசாருக்கு அடிக்கடி புகார்கள் வரத் தொடங்கியது. அப்போது இவர்கள் தனித்தனியாக பிரிந்திருக்கிறார்கள்.

பாசிரனுக்கு சங்கம் விஹாரில் உள்ள ஏகப்பட்ட சொத்துக்கள் அரசு உத்தரவுபடி சீல் வைக்கப்பட்டன. அவற்றை மீட்க வழக்கறிஞர்கள் பாசிரன் ரகசியமாக சந்தித்து வந்தது பொலிசாருக்கு தெரிய வந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட பொலிசார், பாசிரனுக்கு உதவுவது போல் நடித்து அவரை சங்கம் விஹாருக்கு வரவழைத்து கைது செய்தனர்.

தற்போது பாசிரன் மற்றும் அவரது மகன்கள் மீது 113 குற்ற வழக்குகள் உள்ளன. அவர் வாய் திறந்து பேசினால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Mukesh Aggarwal
PTI

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்