நிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம் மீட்பு: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Kabilan in இந்தியா

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராமும், அவர் குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கேரள மாநிலத்தில் கனமழை தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டுள்ளதால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த மழை வெள்ளத்திற்கு பல பிரபலங்களின் வீடுகளும் சிக்கியுள்ளன. முன்னதாக நடிகர் பிருத்விராஜின் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அந்த வீட்டில் இருந்து பிருத்விராஜின் தாயார் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் ஜெயராம் அவரது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கினார். நடிகர் ஜெயராம் திருச்சூர் மாவட்டத்தில் தனது மனைவி, மகள் ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலை 544-யில் குதிரன் என்ற இடத்தில் அவரது கார் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் மண் சரிந்து சாலையில் விழுந்ததால் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் ஜெயராமின் காரும் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஜெயராம் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers