இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..!

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரும், பாஜகவின் மூத்த தலைவருமான முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி (93), கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

அவருக்கு கடந்த யூன் 11ம் திகதி திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கடந்த 9 வாரங்களாக மருத்துவர் ரண்டீப் குலேரியா தலையையில் சிறப்பு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, உடல் நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் காங்கிஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, இன்று மாலை 5.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி:

இந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவில் தனிப்பெரும் ஆளுமையாக இருந்து வந்த வாஜ்பாயி, கடந்த 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தார். சுதந்திரப்போராட்டம் துவங்கி அரசியல் வாழ்க்கையிலும் தன் பெயரை முத்திரையாக பதித்திட்ட வாஜ்பாயி, இந்தியாவின் 10-வது பிரதமராகக் கடந்த 1996-ம் ஆண்டு பதவியேற்றார்.

ஆனால் அடுத்த 13 நாட்களிலே அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 1998-ம் ஆண்டு மீண்டும் பிரதமரான அவர், அதிமுகவினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் 13 மாதங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை பறிகொடுத்தார்.

ஆனால் அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து 1999-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்று 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

50 ஆண்டுக்காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள வாஜ்பாய், மக்களவைக்கு ஒன்பது முறையும் மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய பிரதமராக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியை சார்ந்தவர் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் என்றால் அந்த பெருமை இவரை மட்டுமே சாரும்.

இவரை பெருமை படுத்தும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி வாஜ்பாயினை கௌரவப்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers