கருணாநிதியைப் பாராட்டி கவிதை எழுத மறுத்தது ஏன்? விளக்கமளித்த கவிஞர் தாமரை

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தற்போது இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கவிஞர் தாமரை பேஸ்புக்கில் கலைஞர் கருணாநிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், எனக்கு என் தந்தையாரின் நினைவே மேலோங்கி வருகிறது. அப்பா அந்தக் காலத்திலிருந்து திமுக சார்பாளர். அண்ணா மீதும் பின்னர் கலைஞர் அவர்களின் மீதும் மாறாத அன்பு வைத்திருந்தார். அறுபதுகளில் தமிழகத்தை ஆட்கொண்ட திமுக புயல் பெரும்பாலான வீடுகளில் நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டது.

ஆசிரியர் சமூகம், அதிலும் தமிழாசிரியர் சமூகம் திமுகவைத் தன் தாய் வீடாகவே கருதியது. சனாதனத்தின் பிடியிலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கியிருந்த தமிழகம், உதயசூரியன் வரவால் அறியாமை இருள் அகற்றி புத்தொளிப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது.

அண்ணாவைப்போல் மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் வேறொருவரில்லை என்று அப்பா அடிக்கடி சொல்வார். ஆனால் அண்ணாவை ஏனோ இயற்கை நீண்ட நாட்கள் வாழ விடவில்லை.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அந்த செல்வாக்கு, புகழ், தமிழ், நாவன்மை அப்படியே கலைஞர் அவர்களுக்குக் கையளிக்கப்பட்டது. அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கிக்கொண்டு, அண்ணாவின் சரியான வாரிசு என்பதை கலைஞர் நிரூபித்தார்.

பேச்சு, எழுத்து, நாடகம், திரைப்படம், போராட்டம், அரசியல், ஆட்சி.... எதையும் விட்டுவைக்கவில்லை. எதிலும் சோடை போகவில்லை. தொட்டதிலெல்லாம் கொடி கட்டிப் பறந்தார். இவரைப்போல இன்னொருவர் பிறக்க முடியுமா என்று திகைக்குமளவிற்கு ஏறக்குறைய ஒரு நூறாண்டு ஓய்வில்லாத பெரு வாழ்வு வாழ்ந்தார்.

கலைஞர் அவர்களின் வாழ்வு தனிப்பட்ட அவரது வாழ்வு அல்ல! அவர் வாழ்வை சொல்லிப் போகுமிடத்து தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு வரலாறும் தொடர்ந்து வருவதைக் காணலாம். நல்லதும் கெட்டதுமாக தமிழ்நாட்டின் திருப்புமுனை நிகழ்வுகள் அவரில்லாமல் ஏது?

கலைஞர் அவர்களின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விஞ்சி அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மைகளே இப்போது நிழலாடுகின்றன!

இந்தியாவின் எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழ்நாடு கல்வி, கேள்விகளில் சிறந்திருப்பது எதேச்சையானது அல்ல! மூடநம்பிக்கை ஒழிப்பு, முற்போக்கு சிந்தனை, சமூக நீதி, சுயமரியாதை - பகுத்தறிவுப் பகலவனால் இங்கு விதைக்கப்பட்டு தொய்வின்றி திமுக காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டவையே ஆகும்!

ஐம்பதுகளில் தொடங்கி அறுபதுகளில் உச்சத்தைத் தொட்ட பெண்கள் முன்னேற்றம், சீர்திருத்தம், சாதி மறுப்பு, மக்களாட்சி, உரிமைக்குரல் என எல்லாவற்றையும் அந்தக் காலகட்டத்தில் வந்த திரைப்படங்களைக் கண்டு அறியலாம்!

இந்தத் தலைமுறையினருக்குத் தாங்கள் எதை எதையெல்லாம் தாண்டி வந்தோம் என்பது தெரியாது. கலைஞரின் தலைமை, கலைஞரின் ஆளுமை, கலைஞரின் கண்ணோட்டம் தமிழர்களைத் தரணியில் முதல்வர்களாக்கி வைத்தன என்றால் மிகையில்லை.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகே, கலைஞர் மேலிருந்த பற்று, நம்பிக்கை எல்லாம் எதிர்த்திசையில் திரும்பின. தமிழ்த்தேசியம் என்ற வார்த்தை பரவலாகியது... காலத்தின் மாறுபாடு என்றே சொல்ல வேண்டும்.

கலைஞரின் மேல் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்கள் கூட, "தமிழினத்திற்கு நீங்கள் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?" என்கிற உரிமைக் கோபம் தான்.... ஆம், இவர் செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்திருக்கக்கூடும்.

எதிர்பார்ப்பு ஏராளமாக இருந்ததால் ஏமாற்றமும் தாங்க முடியாததாகவே அமைந்தது. வரலாற்றில் அதுவும் அழிக்க முடியாத கறையாகவே பதியப்பட்டுவிட்டது...

மிகமிக பாதித்தாலே ஒழிய, தனி நபர்கள் மீது கவிதை எழுதுவதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே கடைப்பிடித்து வந்தவள் நான். கல்லூரி முடிந்த காலங்களில் திலீபன் மீது எழுதிய கவிதை மட்டுமே நான் பொதுவாழ்வில் நின்ற ஒருவரை விதந்தோதிய கவிதை !.

2006 ஆம் ஆண்டில் ஒரு முறை எங்கள் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலிருந்து எனக்குத் தொலைபேசி! கலைஞர் அவர்களின் பிறந்தநாள் மலருக்கு நான் கவிதை எழுத வேண்டும் என்று கோரினார்கள். நானோ, "தனியார் மீது கவிதை எழுதுவதில்லை" எனும் கொள்கை முடிவைக் கூறி மறுத்துவிட்டேன். மீண்டும் சில தினங்கள் கழித்துத் தொலைபேசி! அப்போதைய தலைவர் ( திரு வி சி குகநாதன் என நினைவு! ) பேசினார்.

இது என் தனிப்பட்ட கவிதை அல்ல என்றும், எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக அளிக்கவிருக்கும் கவிதை என்றும் தெளிவுபடுத்தினார். இதைத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக முதல்வரை சந்திக்க இருப்பதாகச் சொன்னார். வேறு கவிஞர்களை வைத்து எழுதுங்கள் என்று சொன்னேன்.

"இல்லை, நீங்கள் எழுத வேண்டும் என்பதே கலைஞரின் விருப்பம்" என்றார். எனக்கோ தர்மசங்கடம். எனினும் சங்கத்தின் வேலை என்பதாகக் கருதி, சங்கத்தின் பெயரில்தான் வெளிவர வேண்டும் என்பதை நிபந்தனையாக்கி ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். (ஆனால் அது மலரில் என் பெயரிலேயே வெளிவந்தது

பச்சை விளக்கு' என்று தலைப்பிடப்பட்ட அக்கவிதை இதோ

*பச்சை விளக்கு*

மலையில்லா ஊரில்

மலையாய் உயர்ந்தவன் !

அருவியில்லாச் சீமையின்

அருஞ்சொல் அருவி !

செந்நெல் பூமியின்

கருஞ்சட்டை விதை !

முத்தமிழ் விளைச்சல் !

ஒடுக்கப்பட்டோர் புதல்வன்

ஐம்முறை முதல்வன்

ஓய்வை அறவே துறந்தவன்

மறதியை மட்டும் மறந்தவன்

தண்டவாளத்தில் தலைவைத்த போது தமிழுக்குப் பச்சை விளக்கு ஒளிர்ந்தது

ஐவிரல் பேனா பிடித்தபோது வெண்திரையில்

ஆறாம் அறிவு விழித்தெழுந்தது

வெண்தாடி வேந்தனின் வழித்தடம் காஞ்சித் தலைவனின் இதயத் - திடம்..! உலகத்தமிழரின் உவகை

ஈழத்தமிழரின் எதிர்பார்ப்பு!

அகத் தமிழை ஆழ உழுத

அஞ்சுக மைந்த !

எங்கள் ஆயுளும்

சேரட்டும் உனக்கே !

தமிழகத்தைத்

தமிழ் அகமாய்ச் செய் ....

- ஏக்கத்தில் ஏழு கோடித் தமிழர்கள் !

இன்று.....

தமிழ்நாட்டைத் தாங்கிப் பிடித்த மாபெரும் தூண் சரிந்து விட்டது. 'இனி இதுபோல் யார்?' எனும் நெஞ்சைப் பிசையும் கலக்கத்தை எதைக்கொண்டு மூடிமறைக்க? ஐம்பதாண்டுகளாக கலைஞர் கலைஞர் என்று அன்றாடம் கேட்டு வந்த நிலை இனி கானல் நீர்தானா? கலைஞர் இல்லாத தமிழகமா?

ஓய்வறியாது 94 ஆண்டுகள் மக்கள் பணிக்காகவே அர்ப்பணித்துக்கொண்ட அரிய மனிதர் இறுதியில் ஓய்வெடுக்கட்டும் என்று இயற்கை பணித்ததாக எடுத்துக்கொண்டு அவரது மீளாத்துயிலுக்கு மரியாதை கொடுத்துக் கண்மூடி நிற்போம்!

அவர் விட்டுச் சென்ற பணிகளை அவரது அரசியல் வாரிசுகள் முன்னெடுத்து, நிறைவேற்றிக் காட்டி, அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு மேலும் பெருமை சேர்க்கட்டும்!

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்....

கண்ணீருடன் விடை தருகிறேன்...

போய் வாருங்கள் ஐயா...

மறவாமல் ஓய்வெடுங்கள் ஐயா என்று எழுதியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்